அஜீரண கோளாறு இருக்கிறதா?...இதோ இருக்கு தீர்வு!

சளி, ஆஸ்துமா, மூச்சுத் திணறல் போன்ற பல்வேறு பிரச்சனைகளை சரி செய்ய ஓமம் ஒரு சிறந்த மருந்தாகும். காற்றின் மாசுவினால் ஏற்படும் சுவாச பிரச்சனைகளுக்கு ஓமம் சிறந்த தீர்வை தருகிறது. ஓமத்தை ஒரு துணியில் கட்டி மூக்கினால் நுகர்ந்தால், மூக்கில் நீர் ஒழுகுதல், சளி, மூக்கடைப்பு ஆகியவை குணமடையும்.

கருவுற்றிருக்கும் பெண்களுக்கு ஏற்படும் நெஞ்செரிச்சல்கூட இந்த ஓம நீர் பருகினால் சரியாகும். ஆனால் ஓமம் உடலில் சூட்டை அதிகரிக்கும் என்பதால், கர்ப்பிணி பெண்கள் இதை கவனமாக அடிக்கடி குடிக்காமல், வாரம் ஒரு முறை பருகினால் நல்லது. கர்ப்பகாலத்தில் ஏற்படும் அஜீரண கோளாறுகளை சரி செய்யவும் இதை தாராளமாக பயன்படுத்தலாம்.

வாய்வு, வயிற்று வலி ஆகிய உடல் உபாதைகளுக்கு ஓமத் திரவம் அற்புதமாக வேலை செய்யும் மருந்து. பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ஓமத் திரவம் நல்ல ஜீரண சக்தியை தரும். மாதவிடாய் சுழற்சி சரியாக இருக்கவும், சிறுநீர் கழிக்கும் பாதையை சுத்தமாக வைத்துக் கொள்ளவும் இது மிக உதவியாக இருக்கிறது. பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிக்கும் இந்த ஓமத் திரவத்தை அருந்தினால் வலியில் இருந்து விடுபடலாம்.

வயிற்றில் இருக்கும் புண் ஆறுவதற்கும் ஓமம் மிகவும் உதவியாக இருக்கும். ஒரு சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை அதிகரிக்காமல் இருக்கும். இன்னும் சிலர் பார்க்க பலசாலியாக இருந்தாலும், மாடிப்படி ஏறினாலோ, சிறிய பொருளை தூக்கினாலோ உடனே மூச்சு இறைக்கும். இவர்கள் ஓமத் திரவத்தை கருப்பட்டியோடு காலை வேளையில் அருந்தி வந்தால் உடல் பலம் பெறும்.