ஓய்வில்லாமல் இயங்கும் பரபரப்பான வாழ்க்கையை கொண்டவர்கள் உடற்பயிற்சி செய்வது எப்படி ?

கடினமான உடல் உழைப்பு சார்ந்த வேலை செய்யாதவர்கள் எளிமையான உடற்பயிற்சிகளையாவது மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் வளர்சிதை மாற்ற செயல்பாடு, தசை வலிமை, ஹார்மோன் சமநிலை, மன ஆரோக்கியம், தூக்க சுழற்சி ஆகியவற்றை பராமரிப்பதற்கு உடல் இயக்க செயல்பாடு முக்கிய பங்கு வகிக்கிறது. ஓய்வில்லாமல் இயங்கும் பரபரப்பான வாழ்க்கை பின்னணியை கொண்டவர்கள் உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் ஒதுக்கமுடியாவிட்டாலும் படிக்கட்டுகளில் ஏறுவது நல்லது.

‘ஸ்காண்டிநேவியன் ஜர்னல் ஆப் மெடிசின் அண்ட் சயின்ஸ் ஆப் ஸ்போர்ட்ஸ்’ மேற்கொண்ட ஆய்வில்,படிக்கட்டு ஏறுவது அன்றாட வாழ்க்கை முறை மற்றும் வேலையில் உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இயங்குவதற்கு வழிவகுக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. ‘படிக்கட்டுகள் ஏறுவது எல்லா வயதினருக்கும் நல்லது. நடைப்பயிற்சி செய்வது அல்லது ஓடுவதை விட படிக்கட்டு ஏறுவதன் மூலம் அதிக கலோரிகளை எரித்துவிடலாம். ஒரே ஒரு படிக்கட்டில் ஏறினாலே 0.17 கலோரிகள் எரிக்கப்படும். கீழே இறங்கினால் 0.05 கலோரிகள் எரிக்கப்படும்.

படிக்கட்டு ஏறுவது எடையை குறைப்பதோடு சிறந்த கார்டியோ உடற்பயிற்சியாகவும் அமையும். இதய துடிப்பு, உடல் சமநிலை, செயல்திறன், வலிமை மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்தவும் துணைபுரியும். படிக்கட்டு ஏறுவது இதயத் துடிப்பை மேம்படுத்துவதோடு வாஸ்குலர் செயல்பாட்டையும் துரிதப்படுத்தும். அதனால் உடலில் ரத்த ஓட்டமும் மேம்படுவதோடு கொழுப்பு அளவும் கட்டுக்குள் இருக்கும். படிக்கட்டு ஏறுவது இடுப்பு பகுதிக்கு கீழே உள்ள தசைகளுக்கு நல்ல பயிற்சியாகவும் அமையும்.

முழு உடலையும் படிக்கட்டுகளில் தாங்க செய்வதன் மூலம் அடிவயிறு, இடுப்பு, தொடைகள் மற்றும் கால்களில் உள்ள தசைகள் வலுவடையும். படிக்கட்டு ஏறுவது இதய நோய்களால் ஏற்படும் இறப்பு அபாயத்தை குறைக்கும். குறிப்பாக வயதானவர்களின் நடை, உடல் வலிமை மற்றும் தசை ஒருங்கிணைப்பை மேம்படுத்தும். பதற்றம், மனச்சோர்வு மற்றும் பிற மனநலக்கோளாறுகளின் அறிகுறிகளை போக்கும் உடல் செயல்பாடுகளில் ஒன்றாக படிக்கட்டு ஏறுவது அமைந்திருக்கிறது.