இந்தியாவில் அதிகரித்து வரும் பெண்கள் கரு முட்டை சேமிப்பு

பெரும்பாலான பெண்கள் படிப்பை முடித்ததும், நல்லவேலைக்கு சென்ற பிறகுதான் திருமணம் செய்து கொள்வதற்கு விரும்புகிறார்கள். 30 வயதை நெருங்கும்போதுதான் திருமணத்தை பற்றி யோசிப்பவர்களும் இருக்கிறார்கள். காலதாமதமாக திருமணம் செய்து கொள்வது, குழந்தை பேற்றை தள்ளிப்போடுவது போன்றவை சில சமயங்களில் தாய்மை அடைவதில் சிக்கல்களை உருவாக்கும். அப்படிப்பட்ட பெண்கள் கரு முட்டைகளை இளம் வயதிலேயே சேமித்துவைத்து அவர்கள் கருத்தரிக்க விரும்பும்போது உபயோகிக்கும் நடைமுறை இந்தியாவில் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது.

கருமுட்டைகளை சேமித்து வைத்து திருமணம் ஆன பின், அதனை பயன்படுத்தி கணவரின் உயிரணு மூலம் குழந்தைகளுக்கு தாயாகின்றனர். காலதாமதமாக திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் கரு முட்டைகளை சேமித்து வைப்பதன் அவசியம். குடும்ப பெண்மணியாக, காலம் தாழ்ந்து திருமணம் செய்யும்போது கருத்தரிப்பில் சிக்கல்கள் இருக்கும். பெண்களுக்கு வயது அதிகரிக்கும்போது உடலில் உற்பத்தியாகும் கரு முட்டைகளின் தரம் குறைய தொடங்கும். அதனால் கருத்தரிப்பு சாத்தியம் இல்லாத சூழ்நிலை கூட உருவாகலாம். இதற்கு கரு முட்டைகளை சேமித்து வைப்பதற்கான சரியான தருணம்.

காலதாமதமாக திருமணம் செய்து கொள்ள நினைக்கும் பெண்கள் தங்கள் கருமுட்டைகளை எடுத்து அதற்குரிய நவீன முறையில் சேமித்து பாதுகாப்பது தவறில்லை. ஆனால் அப்படி செய்வது தவறானது என்ற எண்ணம் பெரும்பாலான குடும்பத்தினரிடம் இருக்கிறது. பொதுவாகவே 25 முதல் 30 வயதுக்குள்தான் பெண்களின் கருமுட்டைகள் ஆரோக்கியமானதாகவும், தரமாகவும் இருக்கும். அத்தகைய கருமுட்டைகள்தான் கர்ப்பம் தரிப்பதற்கு உகந்தவை.

அந்த வயதுக்குள் கருமுட்டைகள் செழுமையாக இருப்பதால் பெண்கள் எளிதில் கர்ப்பம் அடைந்துவிடுவார்கள். திருமணத்தை தாமதப்படுத்தும்போது கரு முட்டைகளை வெளியே எடுத்து அதற்காக பிரத்யேகமாக உள்ள கருத்தரிப்பு மையங்களில் சேமித்து வைக்கமுடியும். சுமார் 10 ஆண்டுகள் வரை அந்த கருமுட்டைகளை பயன்படுத்தி கணவரின் உயிரணுவுடன் சேர்த்து கருவுறச் செய்யமுடியும். அதனை விரும்பாத பட்சத்தில் கருமுட்டைகளை தானமும் கொடுக்கலாம்