துணியால் தயார் செய்யப்பட்ட முகக்கவசமா ? பிளாஸ்டிக் முகக்கவசமா ? எது பாதுகாப்பானது

கொரோனா வைரஸ் தாக்காமல் இருக்க வீட்டை விட்டு வெளியே செல்லும்போதெல்லாம் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அனைத்து நாட்டு அரசுகளும் அறிவுறுத்தியுள்ளன. நிறைய பேர் தாங்களாகவே முகக்கவசங்களை தயார் செய்து அணிந்து கொள்கிறார்கள். கடைகளில் விற்கப்படும் முகக்கவசங்களையும் பயன்படுத்துகிறார்கள். அந்த முகக்கவசங்கள் மருத்துவ அம்சங்களை கொண்டதாகவும் இருக்கின்றன. துணியால் தயார் செய்யப்பட்ட முகக்கவசங்கள், பிளாஸ்டிக் முகக்கவசங்கள் இவற்றில் எதனை அணிவது பாதுகாப்பானது என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது.

இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், பிளாஸ்டிக் முகக்கவசம் வைரஸ் தொடர்பை 96 சதவீதம் தடுக்கும் தன்மை கொண்டது. இதை கிருமிநாசினி அல்லது சோப்பு தண்ணீர் கொண்டு எளிதாக சுத்தம் செய்து மீண்டும் பயன்படுத்தலாம். ஒரு நபர் துணியால் தயாரிக்கப்பட்ட முகக்கவசத்தை சரியாக அணியவில்லை என்றால் அவர் தொற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகலாம். ஆனால் முகம் முழுவதையும் மறைக்கும் பிளாஸ்டிக் சீல்டு கொண்ட முகக்கவசங்கள், நோயாளிகளுடன் எப்போதும் தொடர்பில் இருக்கும் மருத்துவ நிபுணர்களுக்குத்தான் பயனுள்ளதாக இருக்கும்.

பிளாஸ்டிக் சீல்டு கொண்ட முகக்கவசங்கள் பாதுகாப்புக்கு கேடயமாகவும், மற்றவர்களின் சுவாசத்தில் இருந்து வெளிப்படும் துகள்களை தடுக்கும் வகையிலும் செயல்படும். இருமல், தும்மல் பாதிப்பு கொண்ட நோயாளிகளிடம் இருந்து பாதுகாக்கும். முகக்கவசங்கள் அணியும் விஷயத்தில் நிறைய பேர் பல்வேறு வழிமுறைகளை சிந்திக்க முயற்சிக்கிறார்கள். உடலை முழுவதும் மூடும் கவசங்கள் எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது தெரியவில்லை. அதேநேரத்தில் இந்த இரண்டு முகக்கவசங்களும் காற்றை வடிகட்டுவதில்லை.

காற்று துளிகளை உடலுக்குள் நுழையவிடாமல் தடுக்கின்றன. எனவே ஏதாவதொரு முகக்கவசம் அணிந்தாக வேண்டும். இருப்பினும் துணி முகக்கவசங்களை விட பிளாஸ்டிக் முகக்கவசங்கள் காற்றில் கலந்திருக்கும் நீர்த்துளிகளை திறம்பட தடுத்துநிறுத்திவிடும். பிளாஸ்டிக் முகக்கவசங்களை ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் கிருமி நாசினியை கொண்டு உடனடியாக சுத்தப்படுத்திவிட முடியும். அதே வேளையில் துணி முக்கவசங்களை துவைத்துவிட்டு உலர வைப்பதற்கு நீண்ட நேரமாகும். என்றாலும் பொதுமக்களுக்கு அதுவே உபயோகிக்கலாம்.