மாம்பழங்களை தண்ணீரில் ஊற வைத்த பின்னர் உண்பதே சிறந்தது

சென்னை: மாம்பழங்களை உட்கொள்வதற்கு முன்பு தண்ணீரில் கழுவ வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. அதை விட தண்ணீரில் அரை மணி நேரமாவது மாம்பழங்களை ஊற வைத்துவிட்டு பின்பு கழுவி உண்பதே சிறந்தது என்பது உணவியல் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

அதற்கான காரணங்களை பார்ப்போம். பெண்கள் மாம்பழங்களை உட்கொள்வது முகப்பரு போன்ற சில தோல் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இவற்றை தவிர்க்க மாம்பழங்களை தண்ணீரில் ஊறவைத்து உட்கொள்வதுதான் சரியானது. இந்த நடைமுறையின்போது மாம்பழங்களின் தோல் பகுதிகளில் படிந்திருக்கும் அழுக்குகள், ரசாயனங்கள் அகற்றப்படுவதை தவிர அறிவியல் ரீதியாக வேறு சில நன்மைகளும் கிடைக்கின்றன என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.


மாம்பழங்கள் இயற்கையாகவே உடலின் வெப்ப நிலையை உயர்த்தும் தன்மை கொண்டது. உடலில் வெப்பத்தை உருவாக்குவதற்கு வித்திடும் தெர்மோஜெனீசிஸ் உற்பத்திக்கு மாம் பழங்கள் வழிவகுக்கும் என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, சாப்பிடுவதற்கு முன்பு மாம்பழத்தை 30 நிமிடம் தண்ணீரில் ஊறவைப்பது தெர்மோஜெனீசிஸ் வீரியத்தை குறைக்க உதவும். பயிர்களுக்குப் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயன உரங்கள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிப்பவை.

தலைவலி, கண் மற்றும் தோல் எரிச்சல், சுவாசக் குழாய் எரிச்சல், குமட்டல் போன்ற பல்வேறு பக்க விளைவுகளை ஏற்படுத்தும். மாம்பழத்தை தண்ணீரில் ஊற வைக்கும்போது அவற்றின் ரசாயனங்களின் வீரியம் குறைந்துவிடும். மேலும் மாம்பழத்தின் தண்டு பகுதியில் வெளிப்படும் பாலின் தன்மையையும் கட்டுப்படுத்திவிடும்.

தாவரங்களால் உற்பத்தி செய்யப்படும் ஒருவகை ரசாயன கலவையான பைட்டோ கெமிக்கல்கள் மாம்பழங்களில் வலுவாக அமைந்திருக்கும். 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவைப்பதன் மூலம் அவற்றின் செறிவு அளவை குறைக்கலாம்.


மேலும் அதிகப்படியான கொழுப்பையும் நீக்கிவிடலாம். மாம்பழங்களில் பைடிக் அமிலம் எனப்படும் ஒருவகையான ஊட்டச்சத்தும் உள்ளடங்கி இருக்கும். இது ஆரோக்கியத்திற்கு நலமும் சேர்க்கும், கேடும் விளைவிக்கும் தன்மை கொண்டது. இரும்புச்சத்து, துத்தநாகம், கால்சியம் மற்றும் பிற தாதுக்கள் உடலில் இருந்து உறிஞ்சப்படுவதை தடுக்கும் ஊட்டச்சத்து எதிர்ப்பு மருந்தாக கருதப்படுகிறது.

அதே நேரத்தில் பைடிக் அமிலம் உடலில் வெப்பத்தை உண்டாக்குகிறது. எனவே மாம்பழங்களை தண்ணீரில் ஊறவைப்பதன் மூலம் அதிகப்படியான அமிலத்தை அகற்றிவிட முடியும்.