உடல் எடையை குறைக்க உதவுகிறது வெங்காயம்

சென்னை: உடல் எடையைக் குறைக்கும் டயட் என்று வரும்போது, எதைச் சாப்பிடலாம், எதைச் சாப்பிடக்கூடாது என்பதில் நாம் அடிக்கடி குழப்பமடைகிறோம். உங்கள் சமையலறையில் அதிக சிரமம் இல்லாமல் கிடைக்கும் ஒரு எளிய விஷயம் இதில் உங்களுக்கு மிகவும் உதவும். அதுதான் வெங்காயம்.

உடல் எடையை குறைப்பதில் வெங்காயம் நமக்கு பெரிய அளவில் உதவக்கூடும். வெங்காயம் என்பது இந்திய சமையறைகளில் அன்றாட சமையலில் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும். ஆனால் வெங்காயத்தை சாப்பிடுவதன் மூலம் மிக வேகமாக உடல் எடையை குறைக்கலாம் என்பது பலருக்குத் தெரியாது. வெங்காயத்தை வைத்து உடல் எடையை எப்படி குறைப்பது என்பதை தெரிந்து கொள்வோம்.

வெங்காயம் நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும். 1 கப் வெங்காயத்தில் 3 கிராம் நார்ச்சத்து உள்ளது. எனவே, தினசரி உணவில் வெங்காயத்தை அதிகம் சேர்த்துக்கொண்டால், உடலுக்கு தேவையான நார்ச்சத்து நமக்கு அதன் மூலம் கிடைக்கும். மேலும், சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, வெங்காயத்தில் காணப்படும் கரையக்கூடிய நார்ச்சத்து பசியைத் தணிக்கிறது. இதன் மூலம் உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு அடிக்கடி பசி எடுக்காமல் இருக்க இது உதவும்.

வெங்காயத்தில் கலோரிகள் மிகவும் குறைவாக உள்ளன. நிபுணர்களின் கூற்றுப்படி, 1 கப் நறுக்கிய வெங்காயத்தில் 64 கலோரிகள் மட்டுமே உள்ளன. எனவே எடை இழப்புக்கு வெங்காயத்தை உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

வெங்காயத்தில் க்வெர்செடின் என்ற தாவர கலவையும் நிறைந்துள்ளது. இது ஒரு ஃபிளாவனாய்டு ஆகும். இது உடல் பருமனைத் தடுக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது மற்றும் உடலுக்கு ஆரோக்கியமானதாக கருதப்படுகிறது.

ஒரு கடாயில் 1 தேக்கரண்டி எண்ணெய் மற்றும் 2 பூண்டு பல் சேர்த்து நன்கு வதக்கவும். இதற்குப் பிறகு 2 நறுக்கிய வெங்காயம் மற்றும் உங்களுக்கு விருப்பமான 1/2 கப் காய்கறிகளைச் சேர்க்கவும். 2-5 நிமிடங்கள் கிளறிக்கொண்டே சமைக்கவும். உப்பு மற்றும் மிளகு சேர்த்து 20 நிமிடங்கள் சமைக்கவும். வெங்காய சூப் தயாராகிவிடும். இதுவும் உடல் எடை குறைப்புக்கு உதவும்.