நோய் தொற்று காலத்தில் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதில் இயற்கை மருத்துவத்தின் பங்கு

மனித இனம் தோன்றியது முதல் தன்னுடைய பிணிகளை போக்க இயற்கை சுழியலுடன் தன் வாழ்க்கையை பிணைத்து கொண்டான். அனைத்து நோய்களுக்கும் இயற்கையில் இருந்து மருந்துகளை கண்டறிந்தான். இயற்கை மருத்துவம் என்பது நமது பாரததேசத்தின் இறையாண்மையுடன் பின்னி பிணைந்தது. ஆதிமனிதன் அனைத்து வகை செடி கொடிகளிலிருந்தும், புல், பூண்டுகளிலிருந்தும், பழங்கள், தானியங்கள் என அனைத்து இயற்கை படைப்புகளிலிருந்தும் மருந்தினை தேடி கண்டுபிடித்தான். ஏன் மண்ணின் மகத்துவத்தை கூட மருந்தாக்கினான்.

இயற்கை மருத்துவம் ஆக்கப்பூர்வமானது. மனிதனின் உடல் நலம், மனநலம், கட்டுப்பாடு, உணர்வு, ஆன்மிகம் ஆகியவற்றினைப் இயற்கையுடன் ஒன்றிணைந்து நோயை குணமாக்க கூடியதாகும். உடல் நலத்தை மேம்படுத்துதல், நோய் வராமல் தடுத்தல், நோய் வந்தபின் சரிசெய்தல், இழந்த சக்தியை மீண்டும் பெற செய்தல் போன்றவற்றினை இயற்கை மருத்துவம் திறம்பட செய்யும். இயற்கைமுறை மருத்துவத்தில் உடலில் நோய் காரணிகள், விஷத்தன்மை மற்றும் தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மூலமாக நோய் குணமாக்கப்படுகிறது.

விஞ்ஞான வளர்ச்சி என்பது சுய லாபத்திற்கு அல்லாமல் இயற்கையை வளப்படுத்துவதற்கு உபயோகிக்க வேண்டும். இன்றைய மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப இயற்கை சூறையாடப்படுகிறது. உலகத்திலேயே நமது பாரத தேசத்தில் தான் எண்ணிலடங்கா மூலிகைச்செடிகள் அமிர்த சஞ்சீவினிகளும் உள்ளன. நமது உணவு பழக்கமே ஒரு மருத்துவம் தான். நாம் அன்றாடம் இயற்கை அருமருந்து உபயோகிக்கிறோம்.

நமது தேசபிதா மகாத்மா காந்தியடிகள் இயற்கை மருத்துவத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்தார். எனவேதான் அவர் 1946 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகில் உருலிகஞ்சன் என்ற இடத்தில் நிசர்கோபச்சர் இயற்கை ஆசிரமத்தை நிறுவினார். நமது மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் இயற்கை மருத்துவத்துடன் யோகாவும் பயிற்றுவிக்கப்பட்டு விழிப்புணர்வை ஏற்படுத்திமக்களிடம் சென்றடைந்து கொண்டிருக்கிறது. இயற்கை மருத்துவத்துடன் யோகா சேர்த்து மானிட வாழ்வியலில் ஒரு மாற்றத்தை மக்கள் கடைப்பிடித்து நோயற்ற, ஒழுக்கமான, ஆரோக்கியமான எதிர்கால தலைமுறைகளை உருவாக்கப்படும் என நம்பிக்கை கொள்வோம்.