கழியும் வருடம் கற்றுக்கொடுத்த அனுபவங்கள் மூலம் புதிய வருடத்தில் மாற்றங்களை கொண்டு வருவோம்

புது வருடம் பிறக்கிறது. கழியும் வருடம் கற்றுக்கொடுத்த அனுபவங்களை மனதில் கொண்டு புதிய வருடத்தில் மாற்றங்களை கொண்டு வருவோம் . நேர்மறையான நல்ல குணங்களை வளர்த்துக்கொள்வது எப்படி என்பது பற்றி சிந்திப்போம். நம்மில் எல்லோருக்குமே சில வேண்டாத குணங்களும் பல நல்ல குணங்களும் இருக்கும்.

நாம் தீய குணங்களில் கவனத்தை செலுத்தி அதை மாற்ற முயற்சிப்பதை விட நம்மிடம் உள்ள நல்ல குணங்களில் கவனத்தை செலுத்தலாம். இயல்பாய் நம்மிடம் உள்ள குணங்களை வளர்த்துக்கொள்வது எப்போதுமே சுலபம் தான். உதாரணத்திற்கு நம்மிடம் சோம்பல் இருக்கிறது என்று வைத்து கொள்வோம்.
அதே நேரம் நம்மிடம் மற்றவர்களுக்கு உதவும் குணம் இயல்பாய் உள்ளது என்றும் வைத்துக்கொள்வோம்.

முடிந்த போதெல்லாம் மற்றவர்களுக்கு நம்மால் முடிந்த உதவிகளை செய்ய முயலும்போது சோம்பல் நாளாவட்டத்தில் தானாகவே மறைந்து விடும். இதே போல் குழந்தைகளிடம் கூட அவர்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி அவர்களை குறை சொல்லிக்கொண்டெ இருப்பதை விட அவர்களுக்கு என்னென்ன நேர்மறையான நல்ல குணங்கள் பழக்கங்கள் இருக்கிறது என்று கவனிக்க வேண்டும். அந்த குணங்களை பற்றி அவர்களிடமும் மற்றவர்களிடமும் புகழ்ந்து கூற வேண்டும்.

குழந்தைகளிடம் இயல்பாய் உள்ள நல்ல குணங்களை அவர்கள் அதிகளவில் வளர்த்துக்கொள்ளும்போதும் அதற்காக நாமும் அவர்களை பாராட்டும் போதும் குழந்தைகள் நாம் சுட்டிக்காட்டும் போதும் தவறுகளை திருத்திக்கொள்வார்கள். எனவே நம்மிடம் உள்ள கெட்ட குணங்களில் கவனம் செலுத்தாமல் நல்ல குணங்களை வளர்த்துக்கொள்வோம். நேர்மறை எண்ணங்களில் கவனம் செலுத்தும் பொது எதிர்மறை எண்ணங்களும் தானாகவே மறைந்து விடுவதையும் நாம் உணர முடியும்.