திருமணத்திற்கு முன் உடலை கட்டுடல் ஆக்க என்ன செய்யலாம் ?

திருமணத்திற்கு தயாராகும்போதுதான் பெண்கள் உச்சி முதல் பாதம் வரை தாங்கள் அழகாக ஜொலிக்கவேண்டும் என்று ஆசை கொள்கிறார்கள். அடுத்து உடல் எடையை கட்டுக்குள் கொண்டுவந்து கட்டுடலுடன் தோன்ற விரும்புகிறார்கள். ஒருபுறம் ஜிம் எங்கே இருக்கிறது என்று தேடிப்போகிறார்கள். மறுபுறம் உணவுக்கட்டுப்பாட்டு ஆலோசகர்களை நாடிச் செல்கிறார்கள். நேரத்திற்கு தூங்கவும் முயற்சி செய்கிறார்கள்.

உணவுக் கட்டுப்பாடு பெண்களுக்கு மிக அவசியம். ஆனால் உணவுக்கட்டுப்பாடு என்ற பெயரில் பட்டினி கிடந்துவிடக்கூடாது. அதற்குரிய நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. ஏன்என்றால் உணவு முறை என்பது எல்லோருக்கும் பொதுவானது அல்ல. ஒவ்வொரு தனி நபரின் உடல்வாகு, வயது, வேலை, தூக்கம் போன்ற பல்வேறு விஷயங்களை ஆராய்ந்து நிபுணர்கள் உணவை பரிந்துரைக்கிறார்கள்.

எல்லா பெண்களும் அதிக எடை கொண்டவர்களாக இருப்பதில்லை. சிலர் போதுமான எடையின்றி ஒல்லியாகவும் தோன்று கிறார்கள். அவர்களுக்கு தங்கள் உடல் எடையை சற்று அதி கரித்தால் நல்லது என்ற எண்ணம் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் ‘வெயிட் டிரைனிங்’ போன்ற கண்டிசனிங் பயிற்சிகளை பெறவேண்டும். நிபுணரின் ஆலோசனையை பெற்று அதற்கு தகுந்தபடி உணவையும் உண்டால், சில மாதங்களில் அவர்கள் உடல் பூசி மெழுகினாற்போல் ஆகிவிடும். குண்டான உடல் எடையை குறைக்க பயிற்சி பெறும்போது சிலருக்கு இரண்டு மாதத்திலே நல்ல மாற்றங்கள் தெரிந்து விடும்.

ஜிம்முக்கு போகும் வாய்ப்பு கிடைக்காதவர்கள் ட்ரெட் மில், சைக்கிளிங் போன்ற பயிற்சி கருவிகளை வாங்கி வீட்டிலே வைத்து பயிற்சி மேற்கொள்ளலாம். ஜிம் தேர்ந்தெடுக்கும்போது கவனம் தேவை. நல்ல பயிற்சியாளர், தரமான பயிற்சி கருவிகள் இருக்கவேண்டும். தேவையான வெளிச்சம், காற்றோட்டமும் இருப்பது நல்லது. பத்து நிமிடம் முதல் நாள் பயிற்சி பெற்று விட்டு, பின்பு நாளுக்கு நாள் நேரத்தை அதிகரிக்கவேண்டும். வாரத்தில் ஐந்து, ஆறு நாட்கள் ஒரு மணி நேரத்திற்கு குறையாத அளவிற்கு பயிற்சி பெற வேண்டும். மணப்பெண்களுக்கு அழகைவிட ஆரோக்கியம் மிக முக்கியம்.