10 நகரங்களில் வெயில் சதமடித்தது... மக்கள் கடும் அவதி

சென்னை: தமிழகத்தில் சென்னை உள்பட 10 நகரங்களிலும், புதுவை மாநிலம் காரைக்காலிலும் நேற்று வெப்ப அளவு சதத்தைக் கடந்தது. இதனால் மக்கள் அதிக அவதிக்குள்ளாகினர்.

அக்னி நட்சத்திர காலத்தில் தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்கிறது. பல நகரங்களில் உச்சபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் நேற்று பதிவான வெப்ப அளவு (டிகிரி பாரன்ஹீட்) விவரம்: பரமத்தி வேலூா்-105.8, வேலூா் 105.26, திருத்தணி 104.18, ஈரோடு 103.64,திருச்சி 103.46,சேலம் 103.28,மதுரை விமான நிலையம் 102.92, மதுரை நகரம் 102.56, சென்னை 102.38,தஞ்சாவூா் 102.2, திருப்பத்தூா் 100.4, காரைக்கால் 100.04.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்ப நிலை இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக் கூடும். வெப்பம் அதிகரிப்பு, காற்றின் ஈரப்பதம் குறைவு காரணமாக இரவு நேரத்திலும் புழுக்கம் அதிகமாக இருக்கும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 102.2 டிகிரி பாரன்ஹீட் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 84.2 டிகிரி பாரன் ஹீட்என்ற அளவில் இருக்கும்.

மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக் கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று ஞாயிறு முதல் வரும் புதன்கிழமை வரை நான்கு நாள்கள் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.