ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளாக அஞ்செட்டி, நாட்ராம்பாளையம், பிலிகுண்டுலு, கேரட்டி, தேன் கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காவிரி ஆற்றின் கிளை ஆறான தொட்டெல்லா ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளது.

நேற்றுமுன்தினம் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 6 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் நேற்று காலை 8 ஆயிரம் கன அடியாக உயர்ந்தது.

நேற்று மாலையில் ஒகேனக்கல்லுக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதற்கிடையே தொடர்மழை காரணமாக இன்று காலை 8 மணி நிலவரப்படி நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.

இதனால் ஒகேனக்கல் பிரதான அருவி, மெயின் அருவி, சினி அருவி, ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீரின் அளவை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.