10,008 தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்திய பொதுமக்கள்

வெள்ளக்கோவில்: வட்டமலை கரை ஓடை அணையில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்தி உள்ளனர் பொதுமக்கள்.

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே உத்தமபாளையத்தில் அமைந்துள்ள வட்டமலை கரை ஓடை அணையில், பரம்பிக்குளம் ஆழியாறு பாசன விரிவாக்கத் திட்டத்தின் கீழ், 650 ஏக்கர் பரப்பளவில், உத்தமப்பாளையத்தைச் சுற்றியுள்ள 30 கிராமங்களில், 6048 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

1980-ல் அணை கட்டி முடிக்கப்பட்டு 25 ஆண்டுகள் கழித்து, தமிழக செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் முயற்சியால் 2021-ல் தண்ணீர் திறக்கப்பட்டது. 25 ஆண்டுகளாக வறட்சிக்கு பின் தற்போது தண்ணீர் வரத்து உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நிர்வாகத்தால் 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடவும், ஆண்டுக்கு 20,000 மரக்கன்றுகள் நடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மரக்கன்றுகள் நடும் திட்டத்தை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். கடந்த 4 ஆண்டுகளாக தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் அகல் விளக்கு ஏற்றுதல் மற்றும் மாரத்தான் விழிப்புணர்வு போட்டி நடத்தப்பட்டு வந்த நிலையில், நேற்று 5-வது ஆண்டாக அப்பகுதி மக்கள் அணையின் பல்வேறு பகுதிகளில் 10,008 தீபங்கள் ஏற்றி தீபம் ஏற்றினர்.