படிப்பை பாதியிலேயே கைவிட்ட 10ம் வகுப்பு மாணவர்கள்

சென்னை: 10ம் வகுப்பு படிக்கும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பாதியிலேயே படிப்பை கைவிட்டதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த ஆண்டு 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதாத மாணவர்கள் எண்ணிக்கை வழக்கத்தைவிட அதிகரித்தது. கொரோனா காரணமாக மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்திருந்ததால் இந்த எண்ணிக்கை அதிகமாகியுள்ளது என விளக்கமளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், இந்த மாணவர்களை தேர்வெழுத வைப்பதில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

இதுபோன்றவை 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் நடைபெறாமல் தடுக்கவும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அனைவரையும் பங்கேற்கச் செய்ய வேண்டும் என தீவிர நடவடிக்கையில் இறங்கிய பள்ளிக்கல்வித்துறை, 10ம் வகுப்பில் முறையாக பள்ளிக்கு வராத மாணவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தியது.

இதில், கல்வி ஆண்டின் இடையிலேயே 50,000 மேற்பட்ட மாணவர்கள் பள்ளிக்கு வருவதை நிறுத்தியிருப்பதும், சென்னையில் மட்டும் 10ம் வகுப்பு படிக்கும் 811 மாணவர்கள் படிப்பை கைவிட்டதும் தெரியவந்துள்ளது.

10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கவுள்ள நிலையில், இந்த மாணவர்களை கண்டறிந்து பள்ளிக்கு வரவழைத்து பொதுத்தேர்வை எழுத வைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதற்காக, பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுகளை வரும் வெள்ளிக்கிழமை வரை நடத்தலாம் என அரசு தேர்வுகள் துறை கால நீட்டிப்பு வழங்கி உள்ளது.