சிவகாசியில் 11 குடிசை வீடுகள் இடிந்து விழுந்தது!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதைத்தொடர்ந்து சிவகாசி பகுதியில் நேற்று 5-வது நாளாக மழை பெய்தது. தொடர்ந்து பெய்து வரும் மழையால் கிராமப்புறங்களில் இருந்த குடிசை வீடுகள் இடிந்து விழ தொடங்கியது.

சிவகாசி தாலுகாவுக்கு உட்பட்ட அதிவீரன்பட்டியில் 5 குடிசை வீடுகளும், கொங்கலாபுரம், ஏ.மீனாட்சிபுரம், ஆனைகுட்டம், அனுப்பன் குளம் ஆகிய பகுதியில் தலா 1 குடிசை வீடுகள் என மொத்தம் 10 குடிசை வீடுகள் நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் வெங்கடேஷ் சம்பவ இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.

இதேபோல் நேற்று முன்தினம் இரவு பெய்த மழைக்கு திருத்தங்கல், விளாம்பட்டி, மாரனேரி, விஸ்வநத்தம் ஆகிய கிராமங்களில் 11 குடிசை வீடுகள் இடிந்து விழுந்துள்ளது. இது குறித்து தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

வீடு இடிந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு சார்பில் நிவாரண தொகை வங்கி கணக்கு மூலம் வழங்கப்பட்டது. வட்ட வழங்கல் பிரிவு சார்பில் அரிசி, மண்எண்ணெய், வேட்டி-சேலைகள் வழங்கப்பட்டன. சிவகாசி மற்றும் சுற்றுப்பகுதியில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 38 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.