கடலூர் மாவட்டத்தில் முதற்கட்டமாக 13 லட்சத்து 95 ஆயிரம் முக கவசங்கள் வழங்க ஏற்பாடு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். நன்றாக சோப்பு போட்டு கைகளை கழுவ வேண்டும் என்றும் அறிவுரை வழங்கி வருகிறது.

இதற்கிடையில் முக கவசங்களை பொதுமக்கள் பணம் கொடுத்து வாங்கி அணிந்து வருகின்றனர். இதை தவிர்க்கும் வகையில் அனைத்து ரேஷன் கடைகளிலும் நபர் ஒருவருக்கு தலா 2 முக கவசங்கள் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் உத்தரவிட்டார். தொடர்ந்து இந்த முக கவசம் வழங்கும் திட்டத்தை கடந்த 27-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் 5-ந்தேதி ரேஷன் கடைகளில் பொதுமக்கள் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதன்படி கடலூர் மாவட்டத்தில் முக கவசம் வழங்குவதற்காக டோக்கன் வழங்கப்பட்டது. ஆனால் நேற்று திட்டமிட்டபடி முக கவசங்கள் ரேஷன் கடைகளில் வழங்கவில்லை. மாறாக வழக்கமாக அரிசி, பருப்பு போன்ற உணவு பொருட்கள் வழங்கப்பட்டன.

இது பற்றி குடிமை பொருள் அலுவலக அதிகாரி ஒருவர் கூறியதாவது:- கடலூர் மாவட்டத்தில் 7 லட்சத்து 30 ஆயிரத்து 289 ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றில் முதல் கட்டமாக நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் உள்ள மக்களுக்கு மட்டும் முக கவசம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் தயாரிக்கும் இடமான திருப்பூரில் இருந்து முக கவசங்கள் கடலூர் மாவட்டத்திற்கு வரவில்லை. வந்தவுடன் முதல் கட்டமாக நபர் ஒருவருக்கு தலா 2 முக கவசங்கள் வீதம் 13 லட்சத்து 95 ஆயிரம் முக கவசங்கள் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. 2-ம் கட்டமாக ஊராட்சி பகுதி மக்களுக்கு முக கவசங்கள் வழங்கப்படும் என்றார்.