3 மாதங்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - சத்தீஸ்கர் மாநிலம் அதிரடி

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதனால் தற்போது நான்காம் கட்ட ஊரடங்கு மே 31ம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும் ஊரடங்கை கடுமையாக அமல்படுத்தும் வகையில் மாநில அரசுகள் சார்பில் பிறப்பிக்கப்பட்டிருக்கும் 144 தடை உத்தரவு சூழ்நிலைக்கு ஏற்ப நீட்டிக்கப்படுகிறது.

இந்நிலையில் தற்போது சத்தீஸ்கர் மாநிலம் அதிரடியாக 3 மாதங்களுக்கு 144 தடை உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக மாநில உள்துறை அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது. 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதிலும், பொது இடங்களில் 4 பேருக்கு மேல் கூடுவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.

மே 31ம் தேதி வரை ரெஸ்டாரன்டுகள், ஓட்டல் பார்கள், கிளப்புகள் மூடப்படும். விளையாட்டு வளாகங்கள், ஸ்டேடியங்களும் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் மொத்தம் 92 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், 59 பேர் குணமடைந்துள்ளனர்.