அரசின் இலவச மகளிர் பயண திட்டத்தின் மூலம் அரசு நகரப் பேருந்துகளில் 173 கோடி பெண்கள் பயணம் ... போக்குவரத்து துறை அமைச்சர்

சென்னை : தமிழகத்தில் கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலின் போது திமுகவினர் தேர்தல் வாக்குறுதியில் பெண்களுக்கு கட்டணமில்லா இலவச பேருந்து பயண திட்டம் கொண்டு வரப்படும் என தெரிவித்தனர்.

பிறகு ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல் கட்டமாக மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை அமல்படுத்தினார். இந்த திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் அரசு நகர பேருந்துகளில் பயணிக்கும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர தொடங்கியது.

இதையடுத்து போக்குவரத்து கழக செயல்பாடுகள் குறித்து நேற்று சென்னை தலைமை செயலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.அப்போது பேசிய போக்குவரத்து துறை அமைச்சர், அரசின் இலவச மகளிர் பயண திட்டத்தின் மூலம் அரசு நகரப் பேருந்துகளில் 173 கோடி பெண்கள் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த திட்டத்தை மேலும் சிறப்பிக்க ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள், பேருந்தில் பயணிக்கும் பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். மேலும் மகளிர் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு எவ்வித இடர்பாடும் ஏற்படாத வகையில் பேருந்துகளை இயக்கிட வேண்டும் என ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளார்.