நாடு முழுவதும் 196 டாக்டர்கள் கொரோனாவால் பலி

இந்தியா முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மக்கள் நடமாட்டம் அதிகரித்தாலும், கொரோனா பரிசோதனைகள் அதிகரித்தாலும் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இருப்பினும் கொரோனாவிலிருந்து குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்வதால் சற்று ஆறுதலடைய செய்துள்ளது.

இந்நிலையில் இந்தியா முழுவதும் சுமார் 196 டாக்டர்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனால் மருத்துவத்துறைக்கு ஏற்பட்டுள்ள இந்த அச்சுறுத்தலில் பிரதமர் மோடி கவனம் செலுத்த வேண்டும் என இந்திய மருத்துவ சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொரோனாவுக்கு எதிரான போரில் முன்களத்தில் நின்று போராடும் மருத்துவத்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளை சேர்ந்த ஏராளமானோரும் இந்த கொரோனா தொற்றுக்கு ஆளாகி வருவதால் கணிசமான உயிரிழப்பும் நிகழ்ந்து வருகிறது. தற்போது, நாடு முழுவதும் 196 டாக்டர்கள் உயிரிழந்திருப்பதாக இந்திய மருத்துவ சங்கம் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இதில் 170 பேர் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். மேலும் இறந்தவர்களில் சுமார் 40 சதவீதம் பேர் பொது மருத்துவர்கள் ஆவர். கொரோனாவுக்கு ஏதிரான போராட்டத்தில் டாக்டர்கள் உயிரிழப்பது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆபத்தான சூழலில் பணியாற்றும் டாக்டர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு அரசின் மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீட்டு பலன்களை அனைத்து துறை டாக்டர்களுக்கும் அரசு வழங்க வேண்டும் என மருத்துவ சங்கத்தின் தேசிய தலைவர் டாக்டர் ராஜன் சர்மா, செயலாளர் அசோகன் ஆகியோர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளனர்.