கைதி தப்பிய சம்பவத்தில் 2 காவலர்கள் பணியிடை நீக்கம்

2 போலீசார் சஸ்பெண்ட்... புதுக்கோட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட கைதி தப்பி ஓடிய நிலையில் இரு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுமி கடந்த ஜூன் 30ஆம் தேதி மாயமானார். அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். இதையடுத்து சிறுமியின் வீட்டிற்கு அருகே உள்ள கருவேல மரங்கள் சூழ்ந்த பகுதியில் கொடிகள் படர்ந்த இடத்தில் சிறுமியின் உடல் கிடந்தது ஜூலை 1ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்டது.

பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஏம்பல் காவல்துறையினர், பூக்கடை நடத்தி வந்த ராஜா என்ற சாமுவேலைக் கைது செய்து புதுக்கோட்டை மாவட்டச் சிறையில் அடைத்தனர்.

இந்தச்சூழலில் நேற்று (ஜூலை 15) போலீஸ் பாதுகாப்புடன் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக நீதிமன்ற அனுமதியுடன் சேர்த்தனர்.

இந்நிலையில் இன்று காலை மருத்துவமனையிலிருந்து கைதி ராஜா தப்பி ஓடியுள்ளார். இதுகுறித்து கணேஷ் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவரை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. புதிதாகப் பொறுப்பேற்ற எஸ்.பி. பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், ராஜாவை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதனிடையே, கைதி ராஜாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற காவலர்கள் முருகையன் மற்றும் கோபால குமார் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.