கிண்டி கொரோனா சிறப்பு மருத்துவமனையிலிருந்து 2 ஆயிரத்து 207 பேர் டிஸ்சார்ஜ்

சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க கிண்டியில் 750 படுக்கை வசதியுடன் கூடிய கொரோனா சிறப்பு மருத்துவமனை கடந்த ஜூலை மாதம் 7-ந் தேதி தொடங்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் 70 படுக்கைகள் தீவிர சிகிச்சை பிரிவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் 300 படுக்கை வசதியில், ஆக்சிஜன் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மருத்துவமனையின் இயக்குனர் டாக்டர் நாராயணசாமி அங்குள்ள அனைத்து நோயாளிகளின் உடல்நிலை குறித்து தினமும் நேரில் சென்று நலம் விசாரித்து வருகிறார். கொரோனா சிறப்பு மருத்துவமனையில் இதுவரை 2 ஆயிரத்து 846 கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 ஆயிரத்து 207 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதுவரை இங்கு 12 வயதுக்கு உட்பட்ட 52 குழந்தைகள், 13 முதல் 59 வயதுக்கு உட்பட்ட 1,752 பேரும், 60 முதல் 80 வயது வரை உள்ள 364 பேரும், 81 முதல் 90 வயதுக்கு உட்பட்ட 29 முதியவர்களும், 90 வயதுக்கு மேற்பட்ட 10 முதியவர்களுக்கும் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மருத்துவமனையில் இதுவரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட, புற்றுநோயுடன் உள்ள 13 பேரும், இருதய நோயுடன் உள்ள 117 பேரும், நுரையீரல் மற்றும் ஆஸ்துமா நோயுடன் உள்ள 96 பேரும், நாள்பட்ட சிறுநீரக நோயுடன் உள்ள 49 பேரும், கல்லீரல் நோயுடன் உள்ள 11 பேரும், காசநோயுடன் உள்ள 13 பேரும், நரம்பியல் நோயுடன் உள்ள 16 பேரும், உயர் ரத்த அழுத்தம் உள்ள 315 பேரும், நீரிழிவு நோயுடன் உள்ள 398 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளன.

இந்நிலையில் அரசு சிறப்பு கொரோனா மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சை குறித்து அங்குள்ள நோயாளி ஒருவர் கூறியதாவது:- கொரோனா சிறப்பு மருத்துவமனையில் எங்களுக்கு மிக தரமான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது. நல்ல ஊட்டச்சத்துள்ள உணவுகள் முறையான நேரத்தில் அனைவருக்கும் கொடுக்கின்றனர். டாக்டர்கள் தினமும் கவச உடை அணிந்து எங்களிடம் நேரில் நலம் விசாரிக்கின்றனர். எனக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர், செவிலியர்களின் பெயர் மட்டுமே தெரிகிறது. அவர்கள் முகத்தை இதுவரை பார்த்ததில்லை என்பதே வருத்தமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.