தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 ஆயிரத்து 439 பேர் சிகிச்சை

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் நோய் தொற்று பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 20 ஆயிரத்து 716 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் கொரோனாவில் இருந்து இதுவரை மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 62 ஆயிரத்து 249 பேர் குணமடைந்துள்ளனர். 3 ஆயிரத்து 571 பேர் சிகிச்சை பலனின்றி கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

மற்ற மாவட்டங்களை விட சென்னையில் தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. சென்னையை தொடர்ந்து செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, வேலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரசால் நேற்று ஒரே நாளில் 349 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் ஆறுமுகநேரி, காயல்பட்டினம், திருச்செந்தூர், ஆத்தூர், பெரியதாழை, மணப்பாடு, ஆழ்வார்திருநகரி மற்றும் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இத்துடன் சேர்த்து தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 896 ஆக அதிகரித்து உள்ளது.

அதே நேரத்தில் மாவட்டத்தில் நேற்று மட்டும் 229 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 428 ஆக உயர்ந்து உள்ளது. 2 ஆயிரத்து 439 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், கோவில்பட்டியை சேர்ந்த 67 வயது முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். அவரது உடல் பாதுகாப்பாக அடக்கம் செய்யப்பட்டது. இதன்மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக அதிகரித்து உள்ளது.