பெங்களூருவில் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 2 வயது பெண் குழந்தை கொரோனாவுக்கு உயிரிழப்பு

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. பெரியவர்கள், சிறியவர்கள் என அனைவரையுமே கொரோனா தாக்கி வருகிறது. இந்நிலையில், மேற்கு வங்காள மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை இருந்தது. 2019 ஆன் ஆண்டு இறுதியில் இந்த குழந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டது.

இதனால் குழந்தைக்கு பெற்றோர் மருத்துவ பரிசோதனை நடத்தியுள்ளனர். அப்போது குழந்தைக்கு ரத்த புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அந்த குழந்தைக்கு சிகிச்சை அளிக்க கடந்த ஆண்டு இறுதியில் பெங்களூருவுக்கு பெற்றோர் அழைத்து வந்தனர். பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு குழந்தைக்கு காய்ச்சல், சளி தொல்லை ஏற்பட்டது.

குழந்தைக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், குழந்தைக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதன்பின், கொரோனா சிறப்பு வார்டில் வைத்து குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் குழந்தை இறந்தது. பின்னர் குழந்தையின் உடலை அடக்கம் செய்ய தன்னார்வலரான ஜம்ஷெட் ரகுமானுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

கொரோனாவால் உயிரிழந்த குழந்தையின் உடலை கூட்லுவில் உள்ள மயானத்தில் வைத்து அடக்கம் செய்தனர். இதுகுறித்து ஜம்ஷெட் ரகுமான் கூறுகையில், இதுவரை கொரோனாவால் இறந்த ஏராளமானவர்களின் உடல்களை அடக்கம் செய்து உள்ளோம். ஆனால் முதல்முறை 2 வயது குழந்தையின் உடலை அடக்கம் செய்து உள்ளோம். இது மனதிற்கு வேதனை அளிக்கிறது என்று கூறினார்.