ஆட்டோவில் கடத்தப்பட்ட 20 கிலோ தங்கக்கட்டிகள் பறிமுதல்

எழும்பூர்: ஆட்டோவில் கடத்திய 20 கிலோ தங்கக்கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுதொடர்பாக கூரியர் நிறுவன ஊழியர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எழும்பூர் பாந்தியன் சாலை ரவுண்டானா அருகே நடந்த சோதனையில் சந்தேகத்திற்கிடமான ஆட்டோ ஒன்றை மடக்கி சோதனை போட்டனர்.


அந்த ஆட்டோவில் உள்ள ஒரு பெட்டியில் ஏராளமான தங்கக்கட்டிகள் இருந்தன. ஆட்டோவில் தங்கக்கட்டிகளை கொண்டு வந்தவர்களிடம் உரிய ஆவணங்கள் ஏதும் இல்லை. மும்பையில் இருந்து கொண்டுவரப்பட்ட அந்த தங்கக்கட்டிகளை சென்னை சவுகார்பேட்டைக்கு கொண்டு செல்வதாக, ஆட்டோவில் வந்த பரத்லால், ராகுல் ஆகியோர் தெரிவித்தனர்.

அவர்கள் சவுகார்பேட்டையில் உள்ள கூரியர் நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக கூறினார்கள். உரிய ஆவணங்கள் இல்லாமல் மும்பையில் இருந்து கொண்டுவரப்பட்ட தங்கக்கட்டிகள் கடத்தி கொண்டுவரப்பட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகம் அடைந்தனர். அவற்றை எடை போட்டு பார்த்தபோது, தங்க கட்டிகள் 20 கிலோ இருந்தது.

அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட கூரியர் நிறுவன ஊழியர்கள் இருவரையும், 20 கிலோ தங்க கட்டிகளுடன் வருமானவரித்துறை அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்த தங்கக்கட்டிகளை மும்பையில் இருந்து சென்னைக்கு கடத்தி கொண்டு வந்தது யார்?, சென்னையில் அவற்றை யாரிடம் ஒப்படைக்க திட்டமிட்டு இருந்தனர்? என்பது பற்றி வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறார்கள்.