சென்னையில் நாளை (ஆகஸ்ட் 7) 2,000 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் பல உயிர் சேதங்கள் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 3 அலைகளை பார்த்த மக்களுக்கு நான்காம் அலை தாக்கத்தை தாங்க முடியாது என்பதால் தடுப்பு நடவடிக்கைகள் மிக தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, கோவிட் தடுப்பூசி செலுத்துவது ஒரு பேரியிக்கமாக நடத்தப்பட்டு, இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் இதுவரை 32 கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.


மேலும் சென்னையில் நடைபெற்ற 32 மெகா தடுப்பூசி முகாம்களில் இதுவரை 40,34,207 கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களில் 55,40,537 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசியும், 47,96,817 நபர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இதனை அடுத்து நாளை (ஆகஸ்ட் 7) சென்னையில் 33வது மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற இருக்கிறது. இம்முகாமிற்காக ஒரு வார்டிற்கு 10 முகாம்கள் என 200 வார்டுகளில் 2,000 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளுக்காக ஒரு வார்டிற்கு 5 சுகாதாரக் குழுக்கள் வீதம் 200 வார்டுகளுக்கு 1,000 சுகாதாரக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்தப் பணிகளில் மாநகராட்சி, காவல்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், இந்திய மருத்துவச் சங்கம் மற்றும் தென்னக இரயில்வே துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து ஆகியோர் ஈடுபட இருக்கின்றனர்.