விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை 6 லட்சத்து 30 ஆயிரத்து 408 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அந்தவகையில் விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன் தினம் வரை 2 லட்சத்து 43 ஆயிரத்து 832 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டதில் 15 ஆயிரத்து 539 பேருக்கு கொரோனா உறுதியானது. 4 ஆயிரத்து 32 பேரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. 14 ஆயிரத்து 170 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். முகாமில் 14 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். வீடுகளில் 84 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று 23 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,562 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் 4 ஆயிரத்து 347 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் 2 ஆயிரத்து 532 பேருக்கு முடிவுகள் தெரிவிக்கப்படவில்லை. கடந்த 3-ந் தேதி மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள் நேற்று தான் வெளியானது.

பரிசோதனை முடிவுகளை வெளியிடுவதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.