மாலைதீவில் சிக்கித் தவித்த 255 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்

255 பேர் தாயகம் திரும்பினர்... கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மாலைதீவில் சிக்கித் தவித்த இலங்கையர்கள் 255 பேர் தாயகம் திரும்பியுள்ளனர்.

அவர்கள் ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸிற்கு சொந்தமான, விசேட விமானம் மூலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். விமான நிலையத்தில் வந்திறங்கிய அனைவரையும் பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களில் தங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஆப்பிரிக்காவில் சிக்கித்தவித்த 289 பேர் விசேட விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸிற்கு சொந்தமான, விசேட விமானங்கள் மூலம் குறித்த 289 பேரும் ஆப்பிரிக்காவிலிருந்து அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அழைத்துவரப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்க நாடுகளான மடகஸ்கர், மொசாம்பிக், உகண்டா, கென்யா, ருவாண்டா மற்றும் தன்சானியாவில் ஹோட்டல் தொழிலில் ஈடுபடுபவர்கள் ஆவர்.

இந்நிலையில் அவர்களும் பி.சி.ஆர் பரிசோதனைகளின் பின்னர் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.