மொரீஷியஸ் கடற்கரையில் சில நாட்களாக 27 டால்பின்கள் உயிரிழந்த நிலையில் கண்டெடு[ப்பு

ஜப்பான் நிறுவனத்திற்கு சொந்தமான வகாஹியோ என்ற எண்ணெய் கப்பல் கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய பெருங்கடலில் உள்ள மொரீஷியஸ் தீவு அருகே பவளப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதன் காரணமாக கப்பலில் உடைப்பு ஏற்பட்டு பல டன் கணக்கில் டீசல் மற்றும் எண்ணெய் கடலில் கலந்தது.

இந்த விபத்தினால் மொரீஷியஸ் தீவுப்பகுதியில் மிகப்பெரிய அளவிலான சுற்றுச்சூழல் பேரழிவு ஏற்பட்டு வருகிறது. கடலில் கலந்துள்ள எண்ணெய்யை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த எண்ணெய் கப்பல் விபத்து அங்குள்ள கடல் உயிரினங்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனால், சுற்றுலாவை முக்கிய வருவாயாக கொண்டுள்ள மொரீஷியஸ் தீவுகளுக்கு பெரும் இழப்பு ஏற்படும்.

இந்நிலையில், விபத்து நடைபெற்ற மொரீஷியஸ் தீவுப்பகுதியில் கடந்த சில நாட்களாக டால்பின்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன. இதுவரை, மொத்தம் 27 டால்பின்கள் உயிரிழந்த நிலையில் கரைஒதுங்கியுள்ளன. எண்ணெய் கப்பல் விபத்து காரணமாக டால்பின்கள் உயிரிழந்திருக்கலாம் என கருத்துக்கள் நிலவி வந்தன. இதனால், உயிரிழந்த டால்பின்கள் சிலவற்றை உடற்கூராய்வு செய்யப்பட்டது.

உடற்கூராய்வில் டால்பின்கள் உயிரிழப்பிற்கு கப்பல் விபத்தால் ஏற்பட்ட எண்ணெய் கசிவு காரணமில்லை. உடலில் ஏற்பட்ட காயங்கள் காரணமாகவே டால்பின்கள் உயிரிழந்துள்ளதாக முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக மொரீஷியஸ் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் எண்ணெய் கசிவுக்கும் இந்த உயிரிழப்புகளுக்கும் தொடர்பு உள்ளதாக என கண்டறிய இயற்கை ஆர்வலர்கள் மொரீஷியஸ் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.