கடுமையான பனிச்சரிவில் சிக்கி இறந்தவர்களில் மேலும் 3 பேர் உடல்கள் மீட்பு

உத்தர்காசி: திரவுபதி கா தண்டா மலைச்சிகரத்தில் ஏறும் போது கடுமையான பனிச்சரிவில் சிக்கி இறந்தவர்களில் மேலும் 3 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசி மாவட்டத்தில் நேரு மலையேற்ற பயிற்சி நிலையம் உள்ளது. அங்கு பயிற்சி பெறுபவர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட 41 பேர் கொண்ட குழு அதே மாவட்டத்தில் உள்ள திரவுபதி கா தண்டா மலைச்சிகரத்தில் கடந்த 4 ஆம் தேதி ஏறினர்.

அதன் பிறகு 17 ஆயிரம் அடி உயரத்தை அடைந்த போது கடுமையான பனிச்சரிவில் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணிகள் உடனடியாக முடக்கிவிடப்பட்டது. இதில் விமானப்படை, ராணுவம் மற்றும் பேரிடர் மீட்பு படை என பெரும்படை களமிறங்கப்பட்டது. பனிச்சரிவில் சிக்கிக்கொண்ட பெரும்பாலானோர் உயிரிழந்து விட்டனர்.

இதில் நேற்று முன்தினம் வரை 16 உடல்கள் மீட்கப்பட்டது. அதன்பிறகு தொடர்ந்து நடந்த மீட்பு பணிகளில் பலனாக நேற்று முன்தினம் இரவில் 3 உடல்கள், நேற்று 7 உடல்கள் என மொத்தம் 10 உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துவிட்டது. இதில் 24 பேர் பயிற்சி பெறுவோர் இரண்டு பேர் பயிற்சியாளர்களும் ஆவர். இன்னும் மூன்று பேரை காணவில்லை என பயிற்சி மையம் கூறியுள்ளது. அவர்களை தேடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.