குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் வாயு கசிந்ததால் 300 பேர் பாதிப்பு

ஈராக்: குளோரின் வாயு கசிந்ததால் மூச்சுத்திணறல்... ஈராக்கில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் வாயு கசிந்த சம்பவத்தில் 300 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றனது.

ஈராக் நாட்டின் டிஹிகுவார் மாகாணம் நசிர்யா நகரம் வடக்கு குவால்ட் சுஹர் மாவட்டத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று உள்ளது. இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு திடீரென குளோரின் வாயு கசிவு ஏற்பட்டது.

அந்த குளோரின் வாயுவை சுவாசித்ததால் சுத்திகரிப்பு நிலையத்தில் பணியில் இருந்தவர்கள், அக்கம்பக்கத்தில் வசித்தவர்கள் என 300-க்கும் அதிகமானோருக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.

இதனை தொடர்ந்து மூச்சுத்திணறல் ஏற்பட்ட அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் குளோரின் வாயு கசிந்ததற்காக காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றதாகவும் கூறப்படுகின்றது.