5 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்... எச்சரிக்கிறார் ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க

கொரோனா வைரஸின் தாக்கத்தால் முச்சக்கர வண்டி ஓட்டுநர்கள் முதல் உயர் மட்ட அதிகாரிகள் வரையிலான 5,00,000 தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் கடந்த வாரம் அரசாங்கம், பொருளாதார மந்தநிலையின் போது 200 பில்லியன் ரூபாயினை அச்சிட்டு பணவீக்கத்தை அதிகரித்துள்ளது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். குறித்த நெருக்கடிக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் பதில் போதுமானதாக இல்லை என்று சுட்டிக்காட்டிய அவர், நிலைமை குறித்த பொருளாதார மதிப்பீட்டை வழங்க வேண்டும் என்றார்.


அந்தவகையில் அதிக வேலைகள் மற்றும் வாழ்வாதாரங்கள் இழக்கப்படுவதற்கு முன்னர், நிலைமை குறித்த பொருளாதார மதிப்பீடு, நம்பகமான பொருளாதார தொகுப்பு மற்றும் வேலைவாய்ப்பு, கட்டுமானத் துறைகளுக்கு அவசர நிவாரணம் ஆகியவற்றை அறிவிக்க வேண்டும் என்றும் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை இறக்குமதிகள் மீதான சமீபத்திய தடையை நீக்க வேண்டும் என்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து செயற்படுவதன் மூலம் ஏற்றுமதி தொடர்பான பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்றும் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.