அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு: தமிழக அரசு தகவல்

50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும்... சூப்பர் ஸ்பெஷாலிட்டி டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவின்படி நடப்பு கல்வி ஆண்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் 50 சதவிகித இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்க உத்தரவிடக்கோரி அரசு மருத்துவர்கள் சிலர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பான வேறொரு வழக்கு நிலுவையில் உள்ளதால் அதுவரை எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசு வாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கிற்கும் தற்போதைய வழக்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று வாதிட்டார்.

இதையடுத்து தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் இட ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டு கடந்த 7-ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாக கூறி அரசாணை தாக்கல் செய்தார் இதனை தொடர்ந்து மத்திய அரசின் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதிகள் தமிழக அரசின் நிலைப்பாட்டை பதிவு செய்துகொண்டு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.