படகில் கடத்திய 100 கிலோ ஹெராயின் போதைப்பொருள் சிக்கியது - 6 பேர் கைது

தூத்துக்குடி அருகே நடுக்கடலில் படகில் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதாக கடலோர காவல்படையினருக்கு தகவல் கிடைத்தது. உடனே கடலோர காவல்படையினர் உஷார்படுத்தப்பட்டனர். தூத்துக்குடி கடலோர காவல்படையில் உள்ள 3 ரோந்து கப்பல்களிலும் கடந்த 17-ந்தேதி முதல் இரவு, பகலாக தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தூத்துக்குடிக்கு தெற்கே கடலோர காவல்படை ரோந்து கப்பல் 'வைபவ்' கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தது. அப்போது, அந்த பகுதியில் இலங்கையைச் சேர்ந்த ஒரு படகு வந்தது. அதில் அந்த நாட்டைச் சேர்ந்த 6 பேர் இருந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த கடலோர காவல்படையினர் படகை வழிமறித்து சோதனை நடத்தினர்.

அப்போது படகில் காலியாக இருந்த டீசல் டேங்கின் உள்ளே சிறிய வெள்ளை நிற பாக்கெட்டுகள் அதிகளவில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அதனை வெளியில் எடுத்தபோது 99 பாக்கெட்டுகள் இருந்தன. இதில் மொத்தம் சுமார் 100 கிலோ ஹெராயின் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த படகு முழுவதும் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

அப்போது, படகின் அடிப்பகுதியில் 20 பெட்டிகளில் பல்வேறு போதைப்பொருட்கள் கலந்த செயற்கை போதைப்பொருட்களும் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. மேலும் அந்த படகில் 9 எம்.எம். ரக நவீன கைத்துப்பாக்கிகள் 5-ம் இருந்தன. படகில் இருந்தவர்கள் தகவல் தொடர்புக்காக தடை செய்யப்பட்ட ‘துரையா’ வகை சேட்டிலைட் செல்போனை பயன்படுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

உடனடியாக கடலோர காவல்படையினர் போதைப்பொருட்கள், துப்பாக்கிகள், சேட்டிலைட் செல்போன் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.500 கோடி இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் படகில் இருந்த 6 பேரையும் கடலோர காவல்படையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர்கள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒரு படகில் இருந்து போதைப்பொருட்களை வாங்கி வருவதாகவும், ஆஸ்திரேலியா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர்.