முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை; மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை

சிறை தண்டனை... நீலகிரி மாவட்டத்தில் முகக் கவசம் அணியாதவர்கள் மீது 6 மாதம் சிறை தண்டனை விதிக்கும் வகையில் வழக்குப் பதிவு செய்யப்படும் என்று ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார்.

ஏற்கனவே நிச்சயிக்கப்பட்ட திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தவிர்த்து வேறு சுப நிகழ்ச்சிகளுக்கு இப்போதைக்கு அனுமதியில்லை என்றும் ஆட்சியர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் அபராதம் விதிக்கப்படும் என காவல்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர். ஆனாலும், பல இடங்களில் முகக்கவசம் அணிவதில் பொதுமக்கள் அலட்சியம் காட்டுவதாக குற்றம் சாட்டப்படுகிறது.

இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக நீலகிரி மாவட்டத்தில் முகக்கவசம் அணியாவிட்டால் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நீலகிரி ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நீலகிரி மாவட்டத்தில் உதகையில் முகக்கவசம் அணியாவிட்டால், தொற்றுநோய் சட்டம், 1897த்தின் கீழ், 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும். தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காத தனி நபர்கள், நிறுவனங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். பொது இடங்களில் நோயைப் பரப்பும் வகையில் எச்சில் துப்பினால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.