கொரோனா பரவல் காரணமாக கர்நாடக கோவில்களில் 60 சதவீத வருவாய் இழப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் ஆரம்பத்தில் குறைவாக இருந்த கொரோனா தாக்கம் தற்போது அதிகரித்து கொண்டே செல்கிறது. கர்நாடகத்தில் இதுவரை 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

2,500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகத்தில் கொரோனா பரவத் தொடங்கிய கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் 8-ந்தேதி வரை அனைத்து கோவில்களும், மசூதிகளும், தேவாலயங்களும் மூடப்பட்டு இருந்தன. ஊரடங்கு தளர்த்தப்பட்டு வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டு இருப்பினும், முக்கியமான கோவில்களில் இன்னும் பக்தர்கள் வருகைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் நடைபெறும் ஆண்டு திருவிழா, தேர்த்திருவிழா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெறுவது ரத்து செய்யப்பட்டு, எளிமையாக நடத்தப்பட்டுள்ளது. இதனால் கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கை, சிறப்பு தரிசனம் போன்ற சேவைகளால் கிடைக்கும் வருவாய் முன்பு போல் கிடைக்கவில்லை. கொரோனா பாதிப்பால் நாட்டின் அறநிலையத் துறையிலும் பொருளாதார இழப்பு உருவாக்கியுள்ளதாக இந்து சமய நிறுவன அறக்கட்டளை ஆணையர் ரோகினி சிந்தூரி தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், கொரோனாவால் கோவில்கள் மூடப்பட்டு இருந்த போது பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு இருக்கிறது. இருப்பினும் கொரோனா பீதியில் பக்தர்கள் கோவிலுக்கு வருவதற்கு ஆர்வம்காட்டுவதில்லை. இதனால் கோவில்களின் வருவாய் பாதிக்கப்பட்டு உள்ளது. சராசரியாக 60 சதவீத வருவாய் இழப்பு உருவாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.