கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6201 பேர் கொரோனாவால் பாதிப்பு

6201 பேர் கொரோனாவால் பாதிப்பு... கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணி நேரத்தில் ஆறாயிரத்து 201 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 74 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை மொத்தமாக வைரஸ் தொற்றினால், ஐந்து இலட்சத்து ஏழாயிரத்து 795 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 14 ஆயிரத்து 228பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 76ஆயிரத்து 859பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 694பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், நான்கு இலட்சத்து 16ஆயிரத்து 708பேர் வைரஸ் தொற்றிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.

இதற்கிடையில் மொடர்னாவின் கொரோனா வைரஸ் தடுப்பூசியை அங்கீகரிக்க இன்னும் தரவுகள் தேவை என கனேடிய சுகாதார நிறுவனம் (ஹெல்த் கனடா) தெரிவித்துள்ளது. மொடர்னா தடுப்பூசிக்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்த பின்னர், கனேடிய சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ‘இந்த நேரத்தில் மதிப்பாய்வை முடிக்க ஒரு திட்டவட்டமான காலக்கெடுவை வழங்க முடியாது. இருப்பினும் இது வரும் வாரங்களில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.