மும்பையில் ஒரே நாளில் கொரோனாவால் 67 பேர் பலி

மும்பையில் நேற்று ஒரே நாளில் கொரோனாவால் 67 பேர் இறந்துள்ளனர். கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஒன்றான மஹாராஷ்டிராவில், பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று (மே 16) ஒரே நாளில் 67 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் அதிகபட்ச கொரோனா பாதிப்பு கொண்ட மாநிலமாக உள்ளது மஹாராஷ்டிரா அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரே நாளில் 1,606 பேருக்கு கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 884 பேர் மும்பையை சேர்ந்தவர்கள். இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு 30 ஆயிரத்தை கடந்துள்ளது.

மும்பையில் மட்டும் கொரோனா பாதிப்புடையோர் எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. மிக அதிக பாதிப்புகளை கொண்ட நகரமான மும்பையில் நேற்று 41 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதில் இருவர் 40 வயதிற்குட்பட்டவர்கள்; 27 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். மேலும் அவர்களில் 24 பேர் ஒன்றுக்கு மேற்பட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள். மும்பையில் மட்டும் இதுவரை 696 பேர் இறந்துள்ளனர். சனி அன்று 524 நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 7,088 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் அதிக அளவில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்ட இடங்களில் மத்திய அரசு வழிகாட்டுதல் படி நோய் தடுப்பு செயல் திட்டம் பின்பற்றப்படுகிறது, மாநிலம் முழுவதும் 1,516 நோய் தடுப்பு மையங்கள் உள்ளது. 14,434 கண்காணிப்பு குழுக்கள் மூலம் மாநில அளவில் 60.93 லட்சம் கண்காணிக்கப்பட்டுள்ளனர் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொற்றுகளின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருவதால், ஊரடங்கைப் பொருத்தவரை மாநில அரசு எந்த முடிவுகளையும் எடுக்கவில்லை. மும்பை, தானே, புனே, மாலேகான், அவுரங்காபாத் போன்ற பெரிய நகரங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று மஹாராஷ்டிராவின் தொழில்துறை அமைச்சர் சுபாஷ் தேசாய் கூறியுள்ளார்.

மேலும், பொருளாதாரத்தை மீண்டும் அதன் பாதையில் கொண்டு செல்ல பல முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன, மும்பைக்கு சிறப்பு பொருளாதார தொகுப்பு ஒன்றை மஹாராஷ்டிரா கோரியுள்ளது என்றார்.