போலி சான்றிதழ் உட்பட முக்கிய காரணத்திற்காக 74 பேர் பணிநீக்கம்

74 பேர் பதவி நீக்கம்... போலி சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கிய காரணங்களுக்காக 74 பேரை பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த மூன்று மாதங்களில் புதிதாக பணிக்கு சேர்ந்தோர் உள்பட 177 பேர் இதுவரை பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டுத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

போலி கல்விச் சான்றிதழ், கடத்தல், ஊழல், பணி புறக்கணிப்பு, சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பது உள்ளிட்ட காரணங்களில் ஈடுபட்ட 74 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 ஊழியர்களுக்கு பதவிகுறைப்பு செய்யப்பட்டுள்ளது. 11 பேரின் மீது பல்வேறு விதமான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில், சிறப்பாக பணியாற்றிய 17 ஊழியர்களுக்கு உயர் செயல்திறனுக்கான பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் ஐந்து பேருக்கு ரொக்கப் பரிசுகளும் வழங்கப்பட்டன. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் குல்காம் சர்வார் கான் கடந்த ஜூன் 24-ஆம் தேதி 262 பாகிஸ்தான் விமானிகளின் ஓட்டுநர் உரிமத்தில் சந்தேகம் உள்ளதாக கூறியது குறிப்பிடத்தக்கது.