ஜப்பானில் ஹாய்ஷென் சூறாவளி நெருங்கி வரும் நிலையில் 8.1 லட்சம் மக்கள் வெளியேற்றம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், பல்வேறு இடங்களில் மக்கள் இயற்கை பேரிடர்களால் அவதியடைந்து வருகின்றனர். நிலச்சரிவு, கனமழை, வெள்ளம், சூறாவளி போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜப்பான் நாட்டின் தெற்கு மற்றும் தென்மேற்கு பகுதி மாகாணங்களை நோக்கி ஹாய்ஷென் என பெயரிடப்பட்ட சூறாவளி நெருங்கி வருகிறது.

ஹாய்ஷென் சூறாவளி ஜப்பானின் தெற்கே அமைந்த யகுஷிமா தீவில் இருந்து 70 கி.மீ. தொலைவில் உள்ளது. இது மணிக்கு 35 கி.மீ. வேகத்தில் வடக்கு நோக்கி நகருவதாக ஜப்பான் வானிலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த சூறாவளி காற்றின் வேகம் மணிக்கு 162 கி.மீ. இருக்க கூடும்.

இந்த சூறாவளி மணிக்கு 216 கி.மீ. வரை வேகமெடுக்க கூடும் என்று கூறப்படுகிறது. ஜப்பானின் கியூசூ தீவை சூறாவளி தாக்கும் என கூறப்படுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனால் அங்கிருந்த 8.1 லட்சம் மக்களை அந்நாட்டு அரசு பாதுகாப்பு பகுதிக்கு கொண்டு சென்றுள்ளது.

ஜப்பானிலுள்ள பிற 10 மாகாணங்களிலும் உள்ள 55 லட்சம் மக்களும் வேறு பகுதிகளுக்கு வெளியேறி செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சூறாவளி தாக்கும் முன் மக்கள் முன்னெச்சரிக்கையாக வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.இதனை தொடர்ந்து மீட்பு படையினரும் தயார் நிலையில் உள்ளனர்.