ஆப்கானிஸ்தானில் பெற்றோரை கொன்ற தலிபான் பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்ற 15 வயது சிறுமி

ஆப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசு படைகளுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. நாட்டின் சில பகுதிகளை தலிபான் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். சில சமயங்களில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் வசிக்கும் அப்பாவி பொதுமக்களை குறிவைத்து தலிபான் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல்களை நடத்துகின்றனர்.

அரசுப்படையினருக்கு ஆதரவு தெரிவிப்பவர்களையும், அரசுப்படையினருக்கு ரகசிய தகவல் வழங்குவதாக சந்தேகத்தின் அடிப்படையின் பொதுமக்களை தலிபான் பயங்கரவாதிகள் இரக்கமின்றி கொல்லுகின்றனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் கோர் மாகாணம் தைவாரா மாவட்டம் கிர்வா கிராமத்தில் வசித்து வந்த 15 வயது சிறுமி கோமர் குல், தனது தாய், தந்தை, சகோதரருடன் வசித்து வந்தார்.

கிர்வா கிராம தலைவராக செயல்பட்டு வந்த கோமரின் தந்தை ஆப்கன் அரசுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வந்ததால், ஆத்திரமடைந்த தலிபான்கள் கடந்த வாரம் இரவு கோமரின் வீட்டிற்கு சென்று கோமர் மற்றும் அவரது சகோதரரின் கண்முன்னே கோமரின் தந்தை மற்றும் தாயை கடுமையாக தாக்கி சுட்டுக்கொன்றுனர்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கோமர் வீட்டிற்குள் சென்று, தனது தந்தை பாதுகாப்பிற்காக வைத்திருந்த ஏகே 47 நவீன ரக துப்பாக்கியை எடுத்து அங்கு நின்று கொண்டிருந்த தலிபான்களை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார். இதில் 2 தலிபான்கள் தலையில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். எஞ்சிய தலிபன்கள் உயிருக்கு பயந்து ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தை அறிந்த அந்நாட்டு அதிபர் மற்றும் அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.