மேற்குவங்கத்தில் இறந்து கரை ஒதுங்கிய 35 அடி நீளமுள்ள திமிங்கலம்

இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம்... மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள மந்தர்மணி கடற்கரை பகுதியில் சுமார் 35 அடி நீளமுள்ள பெரிய திமிங்கலம் இறந்த நிலையில் கரையொதுங்கியது.

மேற்கு வங்க மாநிலம் கிழக்கு மிட்னாபூர் மாவட்டத்தில் உள்ள மந்தர்மணி, வங்காள விரிகுடாவில் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாக உள்ளது. இது வங்காளத்தின் மற்றொரு சுற்றுலா தலமான திகாவுக்கு அருகில் உள்ளது. இங்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.

ஆனால் தற்போது நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இங்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மந்தர்மணி கடற்கரையில் நேற்று சுமார் 35 அடி நீளமுள்ள பெரிய திமிங்கலம் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.

இந்த திமிங்கலத்தில் வால் உள்ளிட்ட பல பகுதிகளில் காயம் இருந்ததாகவும் அதில் ரத்தம் வடிந்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து கரை ஒதுங்கிய திமிங்கலத்தை காண ஏரளாமான மக்கள் கடற்கரையில் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், இது போன்ற ஒரு திமிங்கலத்தை இங்கு இதுவரை கண்டதில்லை. இது முதல் முறை என தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மந்தர்மணி காவல்துறையினர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் திமிங்கலம் கரை ஒதுங்கியது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இருப்பினும், திமிங்கலத்தின் இறப்புக்கான காரணம் இன்னும் உறுதியாக தெரியவில்லை.