குடும்பத்தினரை தூரத்தில் இருந்து பார்த்து கதறியழுத தொழிலாளி; பீஹாரில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

படாத பாடுப்பட்டு பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் வெளி மாநிலத்தில் இருந்து தன் சொந்த மாநிலமான பீஹார் வந்தடைந்த தொழிலாளி ஒருவர் தூரத்தில் நின்ற தன் குடும்பத்தினரை இருந்து பார்த்து கதறி அழுத சம்பவம் அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், வெளிமாநில தொழிலாளர்களை மீட்க, சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் வெளிமாநிலத்தில் வேலை பார்த்த தொழிலாளர் ராம்புகர் பண்டிட் (38) என்பவரின் புகைப்படம், பத்திரிகைகளில் வெளியாகி மக்கள் மனதை நெகிழ வைத்தது.

தன் குடும்பத்தினருடன் தொலைபேசியில் பேசுகையில் கதறி அழுத இவரின் முகம், வெளிமாநில தொழிலாளர்களின் மறு முகத்தை, இன்றைய நிலையை சொல்லாமல் சொல்லி விட்டது. டில்லியில் சிக்கித் தவித்த இவர், ஒரு பெண்ணின் உதவியுடன், சிறப்பு ரயிலில், பீஹார் வந்தடைந்தார்.

பின்னர் பெகுசராய் பகுதியில் உள்ள பள்ளியில் அவர் தனிமைப்படுத்தி தங்க வைக்கப்பட்டார். இதற்கிடையே, இவரது ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. இச்செய்தியை கேட்டு மனமுடைந்துள்ள ராம்புகர் கூறியதாவது: என் குழந்தை இறந்த செய்தியை கேட்டு, என் உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, தனிமை வார்டில் இருந்து, மருத்துவமனைக்கு என்னை அழைத்து வந்தனர்.

சிகிச்சைப் பெற்று வரும் என்னைப் பார்க்க, என் மனைவியும், மகளும், மருத்துவமனைக்கு வந்தனர்.

அருகில் வந்து பார்க்க அவர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. சற்று தொலைவில் நின்றபடி, இருவரும் என்னை பார்த்து அழுதனர். நானும் கதறி அழுதேன். 10 நிமிடங்கள் மட்டுமே, அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். என் குழந்தைகள், என் நிலைமையை கண்டு, உணவு உண்ணுவதில்லை. இக்கட்டான சூழலில் சிக்கித் தவிக்கும் என்னைப் போன்ற மக்களுக்கு, அரசு உதவ முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.