உத்தரபிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் பலி

உத்தரபிரதேசத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன் பரிதாபமாக இறந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் மெஹோபா மாவட்டத்தில் உள்ள புதோதரா கிராமத்தை சேர்ந்த 4 வயது சிறுவன் தனேந்திரா, நேற்று முன்தினம் மதியம் அங்குள்ள வயல்வெளியில் விளையாடிக் கொண்டு இருந்தபோது, எதிர்பாராதவிதமாக அங்குள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான்.

இதனால் அதிர்ச்சியடைந்த கிராமவாசிகள் சிறுவனை மீட்க போரடினர். இதில் 30 அடி ஆழத்தில் சிக்கிய சிறுவன் சுவாசிப்பதற்காக முதலில் ஆக்சிஜன் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிறுவனை மீட்க 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் அருகில் பள்ளம் தோண்டப்பட்டது.

20 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் நேற்று காலை 9 மணிக்கு சிறுவன் மீட்கப்பட்டான். உடனே அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆனால் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் மீட்பு படையினரின் முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.