பாரி முனை கட்டடம் இடிந்து விழுந்த விவகாரத்தில் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு

சென்னை: கட்டடம் இடிந்து விழுந்து குறித்து வழக்கு... சென்னை பாரிமுனையில் கட்டடம் இடிந்து விழுந்த விவகாரத்தில், அதன் உரிமையாளர் பரத் சந்திரன் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அஜாக்கிரதையாக செயல்படுதல், பொது சொத்தை சேதப்படுத்துதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் கட்டட உரிமையாளர் பரத் சந்திரன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை பாரிமுனையில் 4 மாடிக் கட்டடம் இன்று (புதன்கிழமை) காலை இடிந்து விபத்து நேரிட்டது. மன்னடி அருகே உள்ள அரண்மனைக்காரன் தெருவில் பழமை வாய்ந்த 4 மாடிக் கட்டடம் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், இந்த விபத்து ஏற்பட்டது.

விபத்துக்குள்ளான இடத்தில் மேயர் பிரியா, அமைச்சர்கள் சேகர் பாபு, கே.என்.நேரு ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, கட்டட விபத்தில் யாரும் சிக்கவில்லை. கட்டட இடிபாடுகளில் 4 பேர் சிக்கியதாக வந்த தகவல் வதந்தி.

கட்டட விபத்து மீட்பு பணியில் ஈடுபட்ட 2 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்னும் 3 மணி நேரத்தில் கட்டட கழிவுகள் அகற்றப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.