கடன் நிவாரணம் குறித்த உறுதிமொழியைப் பொறுத்தே முடிவெடுக்க முடியும்

கொழும்பு: சர்வதேச நாணய நிதியம் தகவல்... இருதரப்பு கடன்வழங்குபவர்களிடமிருந்து கிடைக்கும் கடன் நிவாரணம் குறித்த உறுதிமொழியைப் பொறுத்தே நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு 2.9 பில்லியன் டொலர் கடனை வழங்க முடியும் என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது.

இந்த நிதி உத்தரவாதங்களைப் பெறுவதற்கு உத்தியோகபூர்வ இருதரப்பு கடன் வழங்குநர்களுடன் இலங்கை தொடர்ந்து பேசி வருகிறது என்றும் சில சீர்திருத்தங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது என்றும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இந்தியாவும் பாரிஸ் கிளப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளும் கடன் மறுசீரமைப்புக்கு தமது ஆதரவை வழங்கியுள்ள அதேவேளை சீனா அதற்குப் பதிலாக கால நீட்டிப்புகளை வழங்கியுள்ளதோடு தமது அணுகுமுறையை பின்பற்றுமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.

இலங்கையின் வெளிநாட்டு கடனான 50 பில்லியன் டொலரில் இதில் சுமார் 10 பில்லியன் டொலர்கள் முக்கியமாக சீனா, ஜப்பான் மற்றும் இந்தியாவிற்கு வழங்க வேண்டியவை என்றும் அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன.