காலை சிற்றுண்டியை பள்ளிகளுக்கு கொண்டு சேர்க்கும் வெள்ளோட்டம்

கோவை: அதிகாரிகள் வெள்ளோட்டம்... மாநகராட்சி பள்ளிகளில் உரிய நேரத்தில் காலை சிற்றுண்டியை கொண்டு சேர்ப்பதற்கான வெள்ளோட்டம் நடந்தது. இதன் போது உணவின் தரம் பரிசோதிக்கப்பட்டது. உரிய நேரத்தில் உணவு வந்து சேர்வது உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், இடைநிற்றலை தவிர்க்கவும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

அதன்படி, 1,545 அரசு துவக்கப் பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்து வரை பயிலும், 1.14 லட்சம் மாணவ, மாணவியருக்கு, முதற்கட்டமாக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கோவை மாநகராட்சியில், 62 பள்ளிகளை சேர்ந்த, 7,255 மாணவ, மாணவியர் இதனால் பயன்பெறுகின்றனர். காலை உணவாக ரவா காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சேமியா உப்புமா, வெண்பொங்கல் உள்ளிட்ட வகைகளில் தினமும் ஒரு 'வெரைட்டி' வழங்கப்படுகிறது.

காலை உணவு திட்டத்தை வரும், 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இதற்கென, கோவை மாநகராட்சி பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்குவதற்கான வெள்ளோட்டம் நேற்று நடந்தது.

அதன்படி, கண்ணம்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தினர் தயாரித்த உணவு, சரியான நேரத்தில் வாகனங்களில் சென்றடைகிறதா என சோதிக்கப்பட்டது.

இதுகுறித்து மாநகராட்சி கல்வி பிரிவினர் கூறியதாவது: மாநகராட்சியின், 100 வார்டுகளில் உள்ள, 62 பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்து வரை பயிலும், 7,255 மாணவ, மாணவியருக்கு வரும், 15 முதல் காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. இதற்கென, உணவு கொண்டு செல்லும் வாகனங்கள் சரியான நேரத்துக்கு பள்ளிகளுக்கு சென்றடைகிறதா, மாணவர்கள் வருகின்றனரா என்பதை எல்லாம் அறிந்துகொண்டு, குறைகள் இருப்பின் நிவர்த்தி செய்ய பள்ளிகளிலும் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது.

காலை, 7:30 மணிக்குள் சரியான நேரத்துக்கு சென்று விட்டன. இதன் அடிப்படையில் மாணவர்கள் எண்ணிக்கை, உணவு தேவையை கணக்கிட்டு 'மாடல்' தயாரிக்கப்பட்டு, தங்கு தடையின்றி சிற்றுண்டி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.