தமிழ் மக்களை குறிவைத்து பழி வாங்கும் அரசு; முன்னாள் ஜனாதிபதி கடும் கண்டனம்

பழிவாங்கல் நடவடிக்கை... கடந்த ஆட்சியில் இருந்த அனைத்துத் சுதந்திரங்களையும் கோட்டாபய அரசு தட்டிப்பறிக்கின்றது. அதுவும் முதலில் தமிழ் மக்களைக் குறிவைத்து தமது பழிவாங்கல் நடவடிக்கையை இந்த அரசு ஆரம்பித்துள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கின்றோம் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.

செஞ்சோலையில் விமானப் படையின் குண்டு வீச்சில் படுகொலை செய்யப்பட்ட மாணவர்களின் நினைவேந்தலைத் தடுப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் கேட்டபோதே அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது: இறந்த தமது உறவுகளை நினைவுகூர்வதைத் தடுப்பது மக்களின் அடிப்படை மனித உரிமை மீறல். விமானக்குண்டு வீச்சில் இறந்தது பாடசாலை மாணவிகள் என்று தெரிந்த பின்னரும் அவர்களுக்கான நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுப்பது பாரிய மனித உரிமை மீறல்.

இறந்த ஆன்மாக்களை நினைவுகூர சுதந்திரம் வழங்க மறுக்கும் இந்த அரசு நாட்டில் எப்படி நல்லிணக்கத்தைக் கொண்டுவரும்? சமாதானத்தை எப்படி ஏற்படுத்தும்? தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வை எப்படி வழங்கும்?

ஆயுதம் தாங்கிய படைகளைப் பயன்படுத்தி சர்வாதிகார வழியில் இந்த அரசு பயணிக்கின்றது என்பது வெளிப்படையாகத் தெரிகின்றது. இது நாட்டுக்கு நல்லதல்ல. இதற்கான பெரிய விளைவுகளை இந்த அரசு எதிர்நோக்க வேண்டி வரும் என்றும் தெரிவித்துள்ளார்.