கலைஞர் நூற்றாண்டு விழாவை கொண்டாட திரையுலகினர் செய்துள்ள பிரமாண்ட ஏற்பாடு

சென்னை: தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞரின் நூற்றாண்டு விழா தமிழ் திரை உலகின் சார்பில் பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. இது தொடர்பாக தமிழ் திரை உலகின் அனைத்து சங்க நிர்வாகிகள் இணைந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது: தமிழ் நாட்டின் முன்னாள் முதல்வர் கலைஞர் தமிழ் திரை உலகிற்கு ஏராளமான உதவிகள் செய்துள்ளார். தமிழில் பெயர் வைக்கும் படங்களுக்கு வரி விலக்கு அளித்தார். தரமான படங்களுக்கு மானியம் தந்தார்.

திரைப்பட நகரம் அமைக்க பையனூரில் 100 ஏக்கர் இடம் தந்தார். படப்பிடிப்பு கட்டணங்களை குறைத்தார். படப்பிடிப்பு அனுமதிக்கு சிங்கிள் விண்டோ சிஸ்டம் கொண்டு வந்தார்.

இது மட்டுமல்லாது 75 படங்கள் மூலம் திரைப்படத்துறைக்கு தனது பங்களிப்பைச் செய்தார். பகுத்தறிவு, சமூக நீதி பெண் உரிமையை தனது படங்கள் மூலம் மக்களுக்கு வழங்கினார். கலைஞர் அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு முழுமையான கலைஞராக வாழ்ந்ததால் அவரது நூற்றாண்டு விழாவை நாங்கள் கொண்டாடுவது பொருத்தமானது.

‘கலைஞர் 100’ என்ற பெயரில் நடக்கும் இந்த பிரமாண்ட விழா சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் வருகிற டிசம்பர் 24ம் தேதி நடக்கிறது. மாலை 4 மணிக்கு தொடங்கும் விழா இரவு 9 மணி வரை நடக்கிறது.