வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது ... இந்திய வானிலை மையம்

சென்னை: வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக நேற்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், வானிலை ஆய்வு மைய கணிப்பின் படி வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

வடமேற்கு வங்கக்கடல் அதை ஒட்டிய ஒடிசா - மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைய தொடங்கி இருக்கும் நிலையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது.


இதையடுத்து புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு இடையே மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

இதேபோன்று நாளை முதல் வருகிற 28.06.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.