6 பேர்களை கொன்ற நபருக்கு 6 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது

அமெரிக்கா:அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தில் வாகனத்தை மோதவிட்டு 6 பேர்களை கொன்ற நபருக்கு சிறை தண்டனை விதித்த பின்னர், பெண் நீதிபதி கண்ணீர் விட்டு கதறியுள்ளார்.

குறித்த வழக்கில், ஏதோ ஒரு வகையில் தாம் தொடர்பு படுத்திக்கொள்ள நேர்ந்ததாகவும், அச்சம்பவம் இதயத்தை நொறுக்குவதாக உள்ளது எனவும் நீதிபதி ஜெனிபர் டோரோ தெரிவித்துள்ளார்.


விஸ்கான்சின் மாகாணத்தில் 2021 நவம்பர் மாதம் இறுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தின் நடுவே மக்கள் மீது வாகனத்தை மோதவிட்டு 8 வயது சிறுவன் உட்பட 6 பேர் பலியாக காரணமானார் Darrell Brooks. அத்துடன் 62 பேர் காயங்களுடன் தப்பியுள்ளனர். இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், குறித்த நபருக்கு 6 ஆயுள் தண்டனையும், அத்துடன் அடையாளமாக 1,067 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிக்கு உரிய தண்டனை அளிப்பது, சமூக மக்களுக்கு பாதுகாப்பான மன நிலையை உருவாக்குவது மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவது இவை மூன்றுமே அவ்வாறான ஒரு தீர்ப்பை அளிக்க தூண்டியதாக நீதிபதி ஜெனிபர் டோரோ தெரிவித்துள்ளார்.

நீதிபதி ஆறு ஆயுள் தண்டனை வழங்குவதாக தீர்ப்பை அறிவித்ததும், நீதிமன்றத்தில் திரண்டிருந்த மக்கள் கரவொலி எழுப்பியுள்ளனர். தீர்ப்பை அறிவிக்க தொடங்கியதும் குற்றவாளியான Darrell Brooks தலை குனிந்து பைபிள் வாசிக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது.

மேலும், திரண்டிருந்த மக்கள் சாட்சியாக நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கோரியதாகவும் கூறப்படுகிறது. மொத்தம் 6 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் Darrell Brooks பிணையில் வெளிவர முடியாது என்றே கூறப்படுகிறது.