ஓடுபாதையில் செல்லும் போது விபத்துக்குள்ளான விமானம்

லிமா: ஓடு பாதையில் செல்லும் போது தீயணைப்பு வாகனத்தின் மீது ஏர் பஸ் விமானம் மோதி விபத்துக்குள்ளானது.

தென் அமெரிக்க நாடான பெருவின் தலைநகர் லிமாவில் உள்ள விமான நிலையத்தில் ஏர்பஸ் ஏ320 விமானம் புறப்பட்டது. இது 102 பயணிகளை ஏற்றிச் சென்ற உள்ளூர் விமானம். விமானம் ஓடுபாதையில் இருந்து மேலெழும்பி செல்ல வேகமெடுத்தது.

அப்போது திடீரென அந்த விமானம் அங்குள்ள தீயணைப்பு வாகனத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது. வாகனத்தின் மீது மோதியதால் விமானத்தின் பின்புறம் தீப்பிடித்தது. இதனால் விமானிகள் விமானத்தை நிறுத்த முயன்றனர். தீப்பொறிகள் பறந்து புகை மூட்டத்துடன் ஓடுபாதையில் பல அடி தூரத்தில் விமானம் சறுக்கி நின்றது.

விமானத்தில் இருந்து பயணிகள் பீதியில் அலறினர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் தீயணைப்பு படை வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

விபத்து குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், “உள்நாட்டு விமானம் ஓடுபாதையில் இருந்து புறப்படும் போது எதிர்பாராதவிதமாக தீயணைப்பு இயந்திரம் மீது மோதியது. இந்த விபத்தில் தீயணைப்பு வீரர்கள் பலியாகினர். பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.